வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரது பதவி செப்டம்பர் 2021 வரை இருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அவர் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. வெங்கடாசலம் சுமார் 35 ஆண்டு காலம் வனத்துறை அதிகாரி என்ற முறையில் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய மூத்த வனத்துறை அதிகாரி.

2 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் பெறுபவர். ஒரு திறமை மிக்க, அனுபவம் வாய்ந்த அனைத்திந்திய வனப்பணி மூத்த அதிகாரி இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை பரிசோதனையில் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்கள் பற்றிய விவரங்களை அவரால் துறை விசாரணையின் போது கண்டிப்பாக விளக்கியிருக்க முடியும்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள், காவல்துறையினரை கேட்டுக்கொள்வதெல்லாம் சட்டப்படி செயல்படுங்கள், நேர்மையாக செயல்படுங்கள். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து நேர்மையான அதிகாரிகளை மிரட்டி வாக்குமூலம் பெறுவதை கைவிடுங்கள். வெங்கடாசலம் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More