அதிமுக உட்கட்சி தேர்தல் ஓபிஎஸ், எடப்பாடி மனுக்கள் பரிசீலனை: இன்று அறிவிப்பு வெளியாகும்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. அதிமுக செயற்குழு வில் கட்சி சட்ட விதியில் கொண்டுவந்த திருத்தத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவித்தது.

அதன்படி இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3ம் தேதி தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி, சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் வேட்புமனுவை பெற வந்தார். அப்போது அவரை அதிமுகவினர் விரட்டி அடித்தனர். இதுகுறித்து அவர் ராயப்பேட்டை போலீசில் புகாரும் அளித்தார்.

இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்புமனுக்களை நேற்று முன்தினம் கட்சி தேர்தல் ஆணையர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வழங்கினர். இருவரின் வேட்புமனுக்களும் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: