ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை ஓபிஎஸ்-எடப்பாடி காரை வழிமறித்து சசிகலா ஆதரவாளர்கள் செருப்பு, கல் வீச்சு: மெரினாவில் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி மரியாதை செலுத்தினர். அப்போது, அவர்களது காரை அமமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அந்தவகையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர் மற்றும் அமமுகவினர் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 10.15 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ‘ஜெயலலிதாவின் தொண்டர்களாக ஒன்றுபடுவோம். நம் கழகம் ஒரு இரும்புக்கோட்டை. அதை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் அவர்களது காரில் புறப்பட்டு செல்லும் போது காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இருவரது வாகனத்தையும் அமமுகவினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைப்பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடமாக இருவரது காரையும் வழிமறித்து ‘டிடிவி.தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க’ என்று கோஷமிட்டனர். அதிமுகவினரும் அவர்களுக்கு எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

அப்போது அமமுகவை  சேர்ந்தவர்கள் சிலர் எடப்பாடி, ஓபிஎஸ், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கார்கள் மீது கற்களையும், செருப்புகளையும் வீசினர்.இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் செருப்பு வீசிய நபர்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில், அதிமுக நிர்வாகியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. இதையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அப்போது 300க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் திரண்டு அமமுக கொடி மற்றும் சசிகலாவின் உருவப்படம் அடங்கிய பதாகைகளை பிடித்து வரவேற்பு அளித்தனர்.

* டிடிவி.தினகரன் மறுப்பு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: பழனிசாமி அண்டு கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களை தாக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதுவும் நாங்கள் போற்றி வணங்குகிற எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அமமுக தொண்டர்கள் இவர்களைபோல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல. அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

* அதிமுக தொண்டருக்கு அடி, உதை

ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை அமமுகவினர் வழிமறித்து கோஷமிட்டபோது, ராயப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்ற அதிமுக தொண்டர் டிடிவி.தினகரன் ஒழிக என்று கோஷமிட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த அமமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் சுதாகரை சூழ்ந்துகொண்டு அடித்து, உதைத்தனர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் சுதாகரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

* டி.டி.வி.தினகரன் தூண்டுதலால் கொலை வெறித்தாக்குதல்: போலீசில் அதிமுக நிர்வாகி புகார்

சென்னை மெரினா காவல் நிலையத்தில் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் மாறன் நேற்று அளித்த புகார் மனு: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (நேற்று) காலை10 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நான், மலரஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, 10.45 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தூண்டுதலின் பேரில், அமமுக கட்சியினர், அடியாட்கள் சட்ட விரோதமாக காமராஜர் சாலையில் நூற்றுக்கும் மேற்ப்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் (தடி, கம்பு, கட்டை, அமமுக கொடியுடன் கூடிய இரும்பு பைப்) அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை

திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, வாகனத்தை மறித்து முற்றுகையிட்டதோடு, மிகவும் மோசமான வார்த்தைகளால் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களை சொல்லி, கூச்சலிட்டு கற்களையும், செருப்புகளையும், கட்டைகளையும், கம்புகளையும் மிகவும் வேகமாக கொலை வெறியோடு வீசினார்கள்.அதில், சில கற்களும், செருப்புகளும், கட்டைகளும் என் மேல்  விழுந்தது. அதில் எனக்கு இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. என்னுடன்  வந்த ராஜப்பாவுக்கு (செங்கல்பட்டு மேற்கு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்) காயம்  ஏற்பட்டது.  

ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்ட என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள், கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று செல்லி என் கன்னத்தில் அறைந்தார்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டி, பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி  தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், டிடிவி. தினகரனின் தூண்டுதலின்படி வன்முறை வெறியாட்டம் நடத்தியதால், டிடிவி.தினகரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது உரிய சட்ட  நடிவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: