சென்னை விமானநிலையத்தில் ரூ65.5 லட்சம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 3 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ65.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.  சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு நேற்று துபாயிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனை செய்தனர். இச்சோதனையில், சிவகங்கையை சேர்ந்த 2 பேர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியறையில் வைத்து, அவர்களின் சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.

அதில் இருந்த பாக்கெட்டை பிரித்தபோது, ஒரு கண்ணாடி பாட்டிலில் இருந்த ரூ26 லட்சம் மதிப்புள்ள 601 கிராம் எடை கொண்ட தங்க பேஸ்ட்கள், செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களின் உடைமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ18 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, சிவகங்கையை சேர்ந்த 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல தயார்நிலையில் இருந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூர் மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து துபாய் செல்லவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சென்னையை சேர்ந்த ஒரு பயணிமீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை தனியறையில் வைத்து சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, ரூ21.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் (சவூதி ரியால்) மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து சென்னை பயணியை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 துபாய் விமானங்களில் 3 பயணிகளிடம் இருந்து ரூ65.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More