திருச்சியில் தண்ணீர் தேங்கும் பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்க திட்டம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: திருச்சி மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து சிமென்ட் சாலை அமைக்க ரூ.18.50 கோடியில் எஸ்டிமேட் போடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி உறையூர் பாத்திமாநகர், விவேகானந்தா தெருவில் வசித்த கிருஷ்ணன் (65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றில் கரையோரத்தில் நின்றிருந்தபோது, தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். இதையடுத்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இறந்த கிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது மனைவி மேரிக்கு ஆறுதல் கூறினார். மேலும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிரிழப்புக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அவரது மனைவி மேரியிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: தியாகராயர் நகர், எஸ்சி நகர், ஏயுடி நகர் மூன்றிலும் தொடர்ந்து இப்பகுதியில் மழைக்காலங்களில் நீர் வடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். 15 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை தான் இன்றளவும் உள்ளது. இந்த முறை வெக்காளியம்மன் கோவிலிலிருந்து கோரையாறு வரை முழுமையாக இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படும். எங்கு தண்ணீர் அதிகமாக நிற்குமோ அங்கு சிமெண்ட் சாலை போட எஸ்டிமேட் போடப்பட்டுள்ளது. ரூ.18.50 கோடி செலவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஆனாலும் நிரந்தரமாக பம்ப் செட் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் முசிறி பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது தெரிந்தது.

அப்பகுதியில் பருத்தி, சோளம், வெங்காயம் பயிர்கள் வீணாகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்வதற்காக அனைத்தையும் கணக்கெடுத்து மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். அரசு அறிவித்ததும் அந்த பணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஆர்டிஓ தவச்செல்வம், மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், திமுக மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: