தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது; மாற்று கட்சியினர் இணையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

சென்னை: தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான  திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர்  தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை: நம்முடைய பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்று உங்களுக்குத் தெரியும். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்”. சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின் அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அந்த அமைச்சரவை வரிசையில் உட்கார்ந்திருக்கும்போது நான் அவரை உன்னிப்பாக உற்றுக் கவனிப்பது உண்டு. பெரும்பாலும் சில அதிமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களுக்குக் கோபம் வர வேண்டும், வெறுப்பு வர வேண்டும் அதனால் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவது வழக்கம். ஆனால் ஒரு நான்கைந்து பேர் எந்தப் பிரச்சினைக்கும் வரமாட்டார்கள்.

அரசினுடைய திட்டங்கள், மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள், மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள், சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் - அதை மட்டும் பேசி மற்ற எந்தப் பிரச்சனையும் உருவாக்காத அமைச்சர்கள் இருந்தார்கள். அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதில் முதல் ஆள் யார் என்றால், பழனியப்பன் அவர்கள்தான். அப்போது அமைச்சர்களுடைய பதிலுரை வருகின்றபோது, நாங்கள் பாதியில் எழுந்தும் சென்றிருக்கிறோம். ஏனென்றால் அந்த அளவிற்கு மோசமாகத் தரம் தாழ்ந்து பேசுவார்கள். அவ்வாறு பேசினால், பதில் சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுவும் கொடுக்க மாட்டார்கள்.

அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை பல நேரங்களில் ஏற்பட்டதுண்டு. ஆனால் பழனியப்பன் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் பதில் சொல்கிறார் என்றால் முழுமையாக இருந்து கேட்டவர்கள் நாங்கள். அதுதான் உண்மை. அவர் வந்து கட்சியில் சேர்ந்தபோது, அவர் இங்கு உங்களிடத்தில் சொன்னார். பண்போடு, ஜனநாயக முறைப்படி, அவர் ஆற்றுகிற அந்தப் பணிகளை கண்டு நான் வியந்ததுண்டு. நான் மட்டுமல்ல, எங்களிடத்தில் இருக்கும் கட்சி முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இதைப் பேசுவது உண்டு. என்னுடைய வேண்டுகோளை ஏற்று, என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற நம்முடைய கழகத் தோழர்களின் வேண்டுகோளையும் ஏற்று இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்.

அவ்வாறு சேர்ந்தது அவர் மட்டுமல்ல, அவரை நம்பி, அவரிடத்தில் எவ்வாறு விசுவாசமாக, அவரோடு இணைந்து பணியாற்றிக் இருக்கிறீர்களோ, “அதே விசுவாசத்தோடு நாங்களும் வருகிறோம், அவரோடு சேர்ந்து பணியாற்ற நாங்களும் காத்திருக்கிறோம்” என்ற உணர்வோடு, இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். அவ்வாறு வந்திருக்கின்ற அவரை மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து உங்களையும் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன். தர்மபுரி மாவட்டம் “வீக் வீக்” என்பார்கள்.

இனிமேல் தர்மபுரி மாவட்டத்தை யாரும் வீக் என்று சொல்லக்கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள்; அவ்வாறு சொல்லவும் முடியாது. ஏனென்றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக்கும் நிலைமையை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல், அதற்கு முன்பு நடைபெற்ற அந்த 9 மாவட்டம் தவிர்த்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏறக்குறைய 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் இடங்களில் வெற்றி பெற்றோம். 9 மாவட்டங்களில் அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, அண்மையில் நடந்த அந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 99 சதவிகித இடங்களில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றோம். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 அல்ல நூறு சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் கடந்த 15, 20 நாட்களாக கடுமையான மழை, வெள்ளம் இதனை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எங்கு மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, எங்கு தண்ணீர் சூழ்ந்து இருக்கிறதோ, எங்கு வெள்ளம் இருக்கிறதோ, எங்கு மக்களுக்கு அதிக இடையூறுகள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்தப் பகுதிகளுக்கெல்லாம், அந்த மாவட்டத்திற்கு எல்லாம் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அந்த மாவட்டத்திற்கு எல்லாம் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் செய்திகளில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

அவ்வாறு செல்லும் இடங்களில் எல்லாம் மழைத் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்திருக்கிறது. அவ்வாறு சூழ்ந்திருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்து, அந்த மழையில், முழங்கால் தண்ணீரில் நின்றுகொண்டு எங்களைப் பார்த்து, எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களைப் பார்த்துதான் குறை சொல்வார்கள். ஆனால் இதுவரை நான் சுற்றி வந்திருக்கும் எந்த இடங்களிலும் ஒரு குறை கூட சொல்லவில்லை. நீங்கள் வந்துவிட்டீர்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து கொடுப்பீர்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதைத்தான் நான் கேட்டேன். நான் மட்டுமல்ல எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என, கட்சி முன்னோடிகள், யாராக இருந்தாலும் இன்றைக்கு ஒவ்வொரு பகுதிகளாக செல்லும்போதும் இதே நிலைதான்.

அதற்கு என்ன காரணம் என்றால் 6 மாத காலத்திற்குள்ளாக, 6 வருடம் இருந்து என்ன செய்ய முடியுமோ அத்தனை காரியங்களையும் நம்முடைய கழக ஆட்சி செய்து இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் தாய்மார்கள் மிகவும் ஆர்வத்தோடு, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் தண்ணீரில் இறங்கி நடந்து செல்கிறபோது, சில தாய்மார்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘ஏன்பா இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இந்த தண்ணீரில் நீ நடந்து வரவேண்டுமா?. ஜாக்கிரதையாக இரு. நீ நன்றாக இருந்தால்தான் நாங்கள் நன்றாக இருக்கமுடியும்” என்று சொல்லும் நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நான் ஏதோ இட்டுக்கட்டிப் பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.

உண்மையாக, சத்தியமாக அண்ணா மீது ஆணையாக இதுதான் இன்றைய நிலை. எனவே அப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். எனவே அதில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிச்சயமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி நமக்கு கிடைக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே அதற்கு துணைநின்று பணியாற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன்.

அவர் கேட்டார், நான் தர்மபுரிக்கு வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் தர்மபுரிக்கு வரமுடியாத ஒரு சூழல். ஏனென்றால் வெள்ளம் இருக்கின்ற காரணத்தினால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியாத ஒரு கால கட்டத்தில் இருக்கின்ற காரணத்தினால், இந்த நிகழ்ச்சியை சென்னை அண்ணா அறிவாலயத்தில், அதுவும் கலைஞர் அரங்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே அண்ணா அறிவாலயத்திற்கு, கலைஞர் அரங்கத்திற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து நம்முடைய முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய பழனியப்பன் அவர்கள் தலைமையில் வந்திருக்கும் அத்தனை பேரையும் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன்.

எனவே மீண்டும் ஒரு முறை பழனியப்பன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஜனநாயக மாண்போடு, அரசியல் நாகரிகத்தோடு, அவர் அமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இல்லை என்று சொன்னாலும், அப்படிப் பணியாற்றக் கூடியவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவர் வந்திருக்கின்ற காரணத்தால் தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இனிமேல் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. எனவே இனிமேல் யாரும் தருமபுரி மந்தமாக இருக்கிறது, கொஞ்சம் டல்லாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பழனியப்பன் வந்துவிட்டார். இனிமேல் அது வெற்றிதான். எனவே வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக… வருக… என சொல்லி வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Related Stories:

More