டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை: அரசாணை வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு

சென்னை: தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே 100 சதவீதம் அரசு வேலை வழங்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழி கட்டாயம்  என்று தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மின்வாரியம் உள்ளிட்ட பணிகளில் வெளிமாநிலத்தவரை சேர்ந்தவர்களை தேர்வு  செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலும்  எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் அரசு வேலைக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும்  தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மை துறை ெசயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக  சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செப்டம்பர் 13ம் தேதி நிகழ்த்தப்பட்ட  2021-2022ம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை  தொடர்பான உரையின் போது, “தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும்  மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக  இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால்  நடத்தப்படும் அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழிபாடத்தாள்  தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

அமைச்சரின்  அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய  செயலாளர்(டிஎன்பிஎஸ்சி) அரசுக்கு அளித்த கருத்துருவின் அடிப்படையில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள  அனைத்துத் தேர்வு முகமைகளால் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்  தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில்  நடத்தப்படும் எழுத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளினை தகுதித் தேர்வாக  கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு, ஆணைகள் வெளியிடப்படுகின்றன. இந்த  ஆணையினை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த  வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும்  நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும்  கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம்  பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும்  கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி  கட்டாயமாக்கப்படுகிறது. தகுதி தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித்  தேர்வுத்தாள்/ தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டதாக உள்ள குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும். முதன்மை எழுத்துத் தேர்வானது மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.

ஒரே நிலை கொண்ட தேர்வுகளின் குரூப் 3, குரூப் 4 தேர்வுகளில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். அதாவது குரூப் 3, குரூப் 4 ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும். இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி-அ என கொள்குறி வகையில் அமைக்கப்படும். பொது அறிவு+திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி ‘ஆ’ என கொள்குறி வகையில் நடத்தப்படும். பகுதி ‘அ’வில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பகுதி ‘ஆ’வில் எழுதிய தேர்வுத்தாளும், இதர தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி ‘அ’ மற்றும் ‘ஆ’)அனைத்து தாள்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்து கொள்ளப்படும். ஒரே நிலை கொண்ட இதர போட்டி தேர்வுகளின் நடைமுறைகளில், தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். தமிழ்மொழி தேர்வானது. பகுதி அ-என கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது. இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பகுதி-ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாட்கள் மதிப்பீடு

செய்யப்படும்.

இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிப்பு செய்யப்படும் அனைத்துப் போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தேர்வு முகமைகளைப் பொறுத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாக துறைகளால் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில், தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் நிதி(பொதுத்துறை நிறுவனங்களின் மாநில கழகம்) துறையால் வெளியிடப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசு வேலைக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்ற தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக இளைஞர்கள் எளிதில் அரசு பணியை பெற முடியும் என்று தேர்வு எழுதுபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More