களக்காடு அருகே பழமையான சிவன் கோயில் மின் இணைப்பு துண்டிப்பு: டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரதோஷ வழிபாடு

களக்காடு: களக்காடு அருகே பத்மநேரி நெல்லையப்பர் கோயிலில் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரதோஷ விழா நடந்தது. களக்காடு அருகே பத்மநேரியில் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயில் உள்ளது. பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள பஞ்சலிங்க  ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற சிவன்  கோயில்களில் ஒன்றாகவும் திகழும் இக்கோயில், 1000 ஆண்டுகளுக்கு  முற்பட்டதாகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இந்த கோயில்  போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி இந்த  கோயிலின் மின் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டித்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்த கோயில் இருளில் மூழ்கி கிடக்கிறது.  இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே நேற்று மாலை மின் சப்ளை இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில்  பிரதோஷ விழா நடத்தப்பட்டது. இது பக்தர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘இந்த கோயிலுக்கு என ஏராளமான  சொத்துகள் உள்ளன. எனினும் இந்த கோயில் மின் கட்டணம் கூட செலுத்தப்படாமல்  இருளில் மூழ்கி கிடக்கிறது, என்றனர். எனவே இந்து சமய அறநிலையத்துறையினர்  கோயிலுக்கு மின் சப்ளை வழங்கவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: