மறுகால் பாயும் நிலையூர் பெரிய கண்மாய் பாசனக் கண்மாய்கள் நிரம்பும் வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பெரிய கண்மாய் மறுகால் பாய்வதால், நிலையூர் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை நிறுத்தக் கூடாது. பாசனக் கண்மாய்கள் நிரம்பும் வரை தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பரங்குன்றம் அருகே, கூத்தியார்குண்டுவில் 742 ஏக்கர் பரப்பளவில், நிலையூர் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் 23 அடி கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கலாம். இதன் மூலம் சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலஙகள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயில் 3 மடைகள், 2 கழுங்குகள் உள்ளன. இந்த நிலையில் சோழவந்தான் அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் பகுதியில் இருந்து, வைகை உபரிநீர் நிலையூர் கால்வாய் மூலம் இந்த கண்மாய்க்கு வருகிறது.

தற்போது வைகை அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும், தொடர்மழையாலும் நிலையூர் கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இந்நிலையில், கண்மாய் நிரம்பி சின்ன கழுங்கு வழியாக மறுகால் பாய்கிறது. இந்த தண்ணீர் சொக்கத்தேவன்பட்டி, கப்பலூர், விடத்தக்குளம், விரிசகுளம் உள்ளிட்ட கண்மாய் வழியாக குண்டாற்றில் கலக்கும். இந்நிலையில், மறுகால் பாய்வதால் கண்மாய்க்கு வரும் நீரை பொதுப்பணித்துறையினர் நிறுத்தக்கூடாது. இதன் மூலம் பாசன கண்மாய்களில் நீர் நிரம்பும் வரை, நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரை திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: