மேலூர் அருகே குளத்து நீர் வெளியேறியதால் சாலை துண்டிப்பு: பாலம் சேதம்-போக்குவரத்து பாதிப்பு

மேலூர் : மேலூர் அருகே, கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், அதை ஒட்டியுள்ள சாலை துண்டிக்கப்பட்டு, பாலமும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலூர் கொட்டாம்பட்டி அருகே, மாங்குளப்பட்டியில் பெய்த மழையால் பழுவட்டான்குளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. இதனால், மாங்குளப்பட்டி-நல்லசுக்காம்பட்டி சாலையில் உள்ள பாலம் உடைந்து, சாலையும் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலூரில் இருந்து அவ்வழியாக சிங்கம்புணரி சென்ற அரசு பஸ் செல்ல முடியாமல், மீண்டும் மேலூருக்கு திரும்பியது. மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மேலூர் தாசில்தார் இளமுருகனின் ஜீப்பும் சாலையில் நிறுத்தப்பட்டது.

பின்னர் தாசில்தார் ஜீப்பில் இருந்து இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பாலம் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், அருகில் உள்ள நல்லசுக்காம்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப பள்ளியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மணியம்பட்டி அரசு பள்ளியில் சென்று தங்கினர்.

இதேபோல் மணியம்பட்டியில் கொலக்குடி கண்மாய் நிரம்பி, உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி உயர்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பள்ளிகளில் வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

Related Stories: