மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்: கோஹ்லி வருகையால் கல்தா யாருக்கு?

மும்பை: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த விராட்கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது. புஜாரா, ரகானே ஒரு ஆண்டுக்கும் மேலாக பார்ம் இழந்து தடுமாறி வரும் நிலையில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அறிமுக டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ்அய்யர் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசினார். இதனால் அவரை நீக்க வாய்ப்பு இல்லை. புஜாரா, ரகானே, அகர்வால் ஆகியோரில் ஒருவருக்கு நாளை கல்தா கொடுக்கப்படும். அகர்வால் நீக்கப்பட்டால் சகா தொடக்க வீரராக ஆடலாம். பந்து வீச்சில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக சிராஜ் இடம்பிடிப்பார்.

இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதுடன் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி கான்பூரில் தோல்வியின் விளிம்பு வரை சென்று போராடி டிரா செய்தது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. வில்லியம் சோமர்வில்லேவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் ஆட உள்ளார். மற்றபடி பெரிய மாற்றம் இருக்காது. முதல் நாளில் இருந்தே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகின்றன. இந்த டெஸ்ட்டில் வென்று இந்தியாவில் முதன்முறையாக தொடரை கைப்பற்றுவதுடன் முதல் இடத்தை தக்க வைக்கும் உத்வேகத்தில் நியூசிலாந்து உள்ளது. இரு அணிகளும் நாளை நேருக்குநேர் மோதுவது 62வது டெஸ்ட்டாகும். இதற்கு முன் மோதிய 61 போட்டியில் இந்தியா 21, நியூசிலாந்து 13ல் வென்றுள்ளது. 27 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

வான்கடேவில் இதுவரை...

வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 25 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 11ல் வெற்றி, 7ல் தோல்வி, 7 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இங்கு 2 டெஸ்ட்டில் ஒரு வெற்றி ஒரு தோல்வி கண்டுள்ளது. 1976ல் 162 ரன் வித்தியாசத்தில் பிஷன்சிங் பேடி தலைமையில் இந்தியா வென்றுள்ளது. கடைசியாக 1988ல் வெங்சர்க்கார் தலைமையில் 136 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. 33 ஆண்டுக்கு பின் இங்கு டெஸ்ட்டில் இரு அணிகளும் மோத உள்ளன.

கடைசியாக இந்தியா இங்கு 2016ல் இங்கிலாந்துடன் மோதிய டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆண்டுக்கு பின் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. வான்கடேவில் 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 631 ரன் குவித்துள்ளது தான் அதிகபட்ச ரன். இங்கு கவாஸ்கர் 11 டெஸ்ட்டில் 5 சதத்துடன் 1122 ரன் எடுத்து டாப்பில் உள்ளார். சச்சின் 921 ரன் அடித்துள்ளார். பந்துவீச்சில் கும்ப்ளே 7 டெஸ்ட்டில் 38 விக்கெட் வீ்ழ்த்தி உள்ளார். அஸ்வின் 4 போட்டியில் 30 விக்கெட் அள்ளி உள்ளார்.

Related Stories:

More