தேனி பஸ் நிலையத்தில் ரத்தகாயத்துடன் கிடந்த பயணி : போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்

தேனி: தேனி புதிய பஸ்நிலையத்தில் நேற்று மதியம் சாரல் மழை பெய்து சற்று தணிந்திருந்தது. அப்போது திண்டுக்கல் பஸ் புறப்படும் வழித்தடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் பஸ் ஓடுதளத்தில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின்னந்தலையில் வெட்டு பட்டு படுகாயம் ஏற்பட்டது. இதனால் பின்னந்தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. படுகாயம் அடைந்தவர் மயக்க நிலைக்கு செல்லாமலும், சுயநினைவுடன் எழுந்து நடக்கமுடியாமலும் தள்ளாடியபடி இருந்தார். இதனால் இவர் தலையில் இருந்து கொட்டிய ரத்தம் அப்பகுதியில் சிந்தி மழை நீருடன் கலந்து ஓடியது.

பஸ்நிலையத்தில் பயணி ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தபோதும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவராகவே தட்டுத்தடுமாறி அருகில் இருந்த பஸ் நிறுத்தப்பகுதிக்கு சென்று மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ பொன்ராம் மற்றும் மற்றொரு காவலர் வந்து படுகாயத்துடன் மயங்கிக்கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் காயம் அடைந்தவர் கம்பம் அருகே கே.கே.பட்டியை சேர்ந்த பாலன் எனத் தெரியவந்தது.காக்கை அடிபட்டால் கூட காக்கை இனங்கள் ஒன்று கூடி சுற்றி கரைந்து பறக்கும் போது, சக பயணி அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில் உதவிட முன்வர முடியாத அளவிற்கு மனித மனம் மரத்து போய்விட்டதா என்பதாக இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: