நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 7 ஆண்டுகளில் 6 இளம்பெண்களை ஏமாற்றி மணந்த கல்யாண மன்னன் அதிரடி கைது: தாய், சித்தியாக நடித்த இரு பெண்களும் சிக்கினர்

நெல்லை: பாளையங்கோட்டை என்ஜிஓ ‘‘பி’ காலனி அருகே உதயா நகரை சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ் (60). இவர், பாளை. டக்கரம்மாள்புரம் ஐஆர்டி பாலிடெக்னிக்கில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது மகள் விஜிலாராணி (33) பிஎஸ்சி, பிஎட் படித்துள்ளார். கடந்தாண்டு ஜூலை 15ம் தேதி இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் மகனும் தூத்துக்குடி தனியார் நிறுவன மேலாளருமான வின்சென்ட் பாஸ்கருக்கும் (40) திருமணம் நடந்தது. பெண் வீட்டார், 40 பவுன் தங்க நகையும், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் செய்தனர். சாயர்புரத்திலுள்ள ஒரு வீட்டில் தம்பதியர் குடியேறினர்.

2 மாதம் மட்டும் குடும்பம் நடத்திய வின்சென்ட் பாஸ்கர், வியாபாரம் செய்யப்போவதாகக்கூறி 40 பவுன் நகையை பெற்றுக்கொண்டு தலைமறைவானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி விஜிலா ராணி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 4வது மனைவியுடன் வசித்து வந்த வின்சென்ட் பாஸ்கர், இவருக்கு தாயாக நடித்த பிளாரன்ஸ் (58), சித்தியாக நடித்த தாமரைசெல்வி (54) ஆகியோரை ைகது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி திசையன்விளை அருகே சுவிஷேசபுரத்தை சேர்ந்த திருமண புரோக்கர் இன்பராஜ் (45) உதவியுடன்  திட்டமிட்டு விஜிலாராணியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மாப்பிள்ளையின் தாயாக நடித்த பிளாரன்சுக்கு ரூ.15 ஆயிரம், சித்தியாக நடித்த தாமரைசெல்விக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. வின்சென்ட்பாஸ்கர் கடந்த 7 ஆண்டுகளில் சாயர்புரம் அருகே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் முதல் திருமணம், பணகுடி அருகே பாப்பான்குளத்தில் 2வது திருமணம், களக்காடு டோனாவூரில் 3வது திருமணம், களக்காடு கீழகாடுவெட்டியில் 4வது திருமணம், தூத்துக்குடியில் 5வது திருமணம் செய்து, 6வதாக விஜிலா ராணியை திருமணம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.  திருமண புரோக்கர் இன்பராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

* 7வதாக பெண் பார்க்கும் படலம்

கல்யாண மன்னன் வின்சென்ட் பாஸ்கர், ஒவ்வொரு திருமணமும்  முடிந்து மூன்று மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு ரொக்க பணம் மற்றும் தங்க நகையை வியாபாரம் செய்வதற்கு வேண்டும் என  நாடகமாடி அபகரித்து வந்துள்ளார். இரு மனைவிகளிடம் மட்டுமே விவாகரத்து  பெற்றுள்ளார். தற்போது 7வது திருமணத்திற்கு திட்டமிட்டு பெண் பார்க்கும்  போது தான் கைதாகி உள்ளார்.

Related Stories:

More