தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கொட்டி தீர்க்கும் இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள் இடிந்து பலர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் பலியாகியுள்ளது.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கனமழையால் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. எனவே தமிழகத்திற்கு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை தொடர்ந்து, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசானது தமிழகத்திற்கு 7 பேர் கொண்ட குழுவை அனுப்பி ஆய்வு செய்து அந்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் இதுவரை தமிழகத்திற்கு நிதி எதுவும் ஒன்றிய அரசால் ஒதுக்கப்படவில்லை. தற்போது, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக 3,555 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக இன்று நாடாளுமன்ற மக்களவையில் குறுகிய கால விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளாகும்.

Related Stories: