ஒட்டன்சத்திரம் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சடையன்குளம்-விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சடையன்குளம் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளம் இது.

இந்த குளத்திற்கு பரப்பலாறு அணையிலிருந்து நங்காஞ்சி ஆறு மூலம் அணைப்பட்டியிலிருந்து பிரியும் வாய்க்காலில் இருந்து நீர்வரத்து இருக்கும். மேலும் தங்கச்சியம்மாபட்டி மற்றும் அம்பிளிக்கைப் பகுதியில் உள்ள ஓடைகள் மூலம் மழைநீர் வரும். ஆனல் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்பில் சிக்கி நீர்வரத்து இல்லாமல் போனது. இதனையடுத்து விழுதுகள் என்ற சமூக அமைப்பு ரூ.30 லட்சம் செலவில் வரத்து வாய்க்கால்கள் வருவாய் துறை மற்றும் சர்வே துறை மூலம் அளவீடு செய்து எல்லைகற்கள் நடப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்த தென்னைமரங்கள் அகற்றப்பட்டு 3 கி.மீ. நீளம் கொண்ட வாய்க்கால் 80 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இரண்டு ஓடைகளும் 2 கி.மீ தூரத்திற்கு அகலப்படுத்தி தடையின்றி நீர் குளத்திற்கு வரும் வகையில் அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் பெய்த மழையால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குளம் நிரம்பி வடக்கு பகுதியில் மறுகால் சென்றது. தற்போது பெய்துவரும் கனமழையினால் 25 ஆண்டுகளுக்கு பிறகு தெற்கு பகுதியில் குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: