புராண வரலாற்றை சித்தரிக்கும் விதமாக அனுமன் பிறந்த அஞ்சனாத்திரியில் தீம் பார்க்: திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

திருமலை: புராண வரலாற்றை சித்தரிக்கும் விதமாக அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் விரைவில் தீம் பார்க் அமைக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் தெரிவித்தார். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தலைமை செயல் அதிகாரி ஜவகர் பேசியதாவது: அனுமன் பிறந்த இடமான திருமலையில் உள்ள ஆகாச கங்கையில் இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சி ஊடகத்தில் தெரிவிக்கும் விதமாக தீம் பார்க் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆகாசகங்கையில் படிக்கட்டுகளின் ஒருபுறம் தீம் பார்க், மறுபுறம் பக்தர்கள் தியானம் செய்யும் வகையில் தியான மண்டபம் அமைக்கப்பட வேண்டும்.  இதில் அஞ்சனாதேவி தவம் இருந்து வாயு தேவன் மூலம் குழந்தை பாக்கியம் பெற்று அனுமனை பெற்று அவர் சூரியனிடம் சென்றது. தேவேந்திரன் வஜ்ர ஆயுதத்தை அனுமன் மீது பயன்படுத்தியது போன்ற அனுமன் புராண வரலாற்றை சித்தரிக்கும் விதமாக இந்த தீம் பார்க் அமைக்க வேண்டும்.

 இதற்காக கலை இயக்குனர் ஸ்ரீஆனந்த சாயியுடன் இணைந்து தீம் பார்க் பணிகளை பொறியியல் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். ஆகாசகங்கையை காண வரும் பக்தர்கள் வெயில் மற்றும் மழையால் பாதிக்காத வகையில் மேற்கூரை அமைக்க வேண்டும். தீம் பார்க் குறித்த பவர் பாயின்ட் பிரசன்டேஷனை விரைவில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கும் விதமாக ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

Related Stories: