நேஷனல் ஹெரால்டு வழக்கில் திருப்பம்; கர்நாடக துணை முதல்வருக்கு சிக்கல்: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆஜராகக் கோரி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ‘யங் இந்தியன்’ நிறுவனம் மூலம் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாகப் புகார் எழுந்தது. அமலாக்கத்துறை அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மீது கடந்த அக்டோபர் மாதம் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘யங் இந்தியன் நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட நிதி, அதற்கான ஆதாரம் மற்றும் வருமான வரிக் கணக்கு விவரங்களுடன் வரும் 19ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பு மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள சிவகுமார் தரப்பினர், ‘விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: