திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக – பாஜ எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரிய தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுப்பப்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கும், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மதுரை உச்சிபிள்ளையார் மண்டபத்திற்கு அருகே வழக்கமாக ஏற்றப்படும் விளக்குடன், சுப்பிரமணிய சுவாமி கோயில் தீபத்தூணில் விளக்கேற்ற மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், கடந்த 3ம் தேதி தனி நீதிபதி மற்றொரு உத்தரவு பிறப்பித்து இந்து அமைப்பினர் விளக்கேற்றுவதற்கு அனுமதி அளித்ததோடு, அவர்களின் பாதுகாப்பை சிஐஎஸ்எப் வீரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் குவிந்த இந்து அமைப்பினர் போலீசாரை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி திமுகவின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி நோட்டீஸ் வழங்கினார்கள். இதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருந்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரம் துவங்கியதும் இந்த விவகாரத்தை எழுப்பிய திமுக எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் விளக்கு தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையை எழுப்பினர். இதனால், அவையில் கடும் அமளி நிலவியது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்ற திமுக கூட்டணி கட்சி எம்பிக்களின் கோரிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா மறுத்துவிட்டார். திமுக மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் கூடியபோது பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி ஆர் பாலு, ‘‘தமிழ்நாட்டில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு பாஜ முயற்சிக்கின்றது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட சித்தாந்தத்துக்கு விசுவாசமாக இருக்கிறார். மலையில் யார் தீபம் ஏற்றவேண்டும்? இந்து சமய அறநிலைய வாரிய பிரதிநிதியா அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து தீர்ப்பைப் பெற்ற சில தவறானவர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுக எம்பியின் பேச்சுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய கிரண் ரிஜிஜூ, திமுக உறுப்பினர் நீதித்துறையை அவதூறு செய்ய முடியாது. நீதிபதி குறித்து அவர் கூறிய கருத்துக்களை அவை தலைவர் நீக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, டி.ஆர்.பாலு பேச்சின் ஒரு பகுதி அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல் முருகன், ‘‘நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு? திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழிபடும் உரிமையை தமிழக அரசு மறுக்கின்றது” என்றார்.

அப்போது, எம்பி. டிஆர் பாலு மற்றும் அமைச்சர் எல் முருகனுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில திமுக எம்பிக்கள் அமைச்சர் ரிஜிஜூ இருக்கைக்கு அருகே சென்று முழக்கமிட்டனர். இதனால் அவை தலைவர் அவர்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இதேபோல் மாநிலங்களவையில் அவையை ஒத்திவைத்துவிட்டு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி கொடுத்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்பதற்கு மாநிலங்களவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதை கண்டித்து கோஷமிட்டபடி திமுக உட்பட கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: