புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பரபரப்பு; மர்ம பொருள் வெடித்து வீடு தரைமட்டம்: தாய்- மகள் உள்பட 3 பேர் காயம்

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியதால் வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் (46). தனியார் ஊழியர். இவருக்கு எழிலரசி (43) என்ற மனைவியும், 12 வயதில் மகளும் உள்ளனர். நேற்றிரவு மனைவி, குழந்தைகளுடன் ஜெயசங்கர் வீட்டில் தூங்கினார். அதிகாலையில் எழுந்த அவர், கடைக்கு சென்றுள்ளார். இதனிடையே காலை 6.30 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க அறையில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதை தொடர்ந்து வீட்டின் முன்பக்க அறையில் இருபக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டை ஒட்டி வசிக்கும் காய்கறி வியாபாரியான ஜோதி (55) உள்ளிட்ட மேலும் சிலரது வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. 1 கிமீ தூரம் வரை பயங்கர சத்தம் கேட்கவே அப்பகுதியில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடிவந்து ஜெயசங்கர் வீட்டின்முன்பு திரண்டனர். முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் வந்து விசாரித்தார். அப்போது சிலிண்டர் வெடித்ததாகவும், பிரிட்ஜ் வெடித்து விட்டதாகவும் தகவல் பரவியது. இருப்பினும் வீட்டின் முன்பகுதி அறை அங்கிருந்த பொருட்களுடன் தரைமட்டமாகி கிடந்ததோடு வீட்டிற்குள் யாரும் செல்ல முடியாதபடி இடிந்து விழும் அபாய தன்மையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி யாரும் உள்ளே செல்லவில்லை.

இதனிடையே அங்கிருந்த எழிலரசி, மகள் தீக்காயத்துடன் வெளியே வந்தனர். அவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் சீனுவாசன் என்பவரின் மனைவி ஜோதியும் படுகாயமடைந்த நிலையில் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தவிர மேலும் சிலர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்து முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்சத ஏணிகளை பயன்படுத்தி பக்கத்து வீடுகள் வழியாக சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த வீட்டின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில், பக்கத்தில் உள்ள வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த வீடுகளின் மேற்கூரை ஷீட்டுகளும் இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு சிதறி கிடந்தன. காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களும் சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

இதனால் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிலிண்டர் வெடிக்கவில்லை என்பதை உறுதி செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வரும் எழிலரசியிடம் விசாரித்தபோது, வீட்டில் பிரிட்ஜை ஆன்செய்தபோது விபத்து நடந்ததாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட தகவலை வைத்து அவரது கணவரிடம் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே எழிலரசி வீட்டிற்கு நேற்று புதிய பிரிட்ஜ் வந்ததாகவும், அதை முறைப்படி பணியாளர்கள் வந்து ஆன் செய்வதற்கு முன்பே பயன்படுத்தியதால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பயங்கர சத்தத்துடன் 3, 4 வீடுகள் சேதமடையும் நிலைக்கு விபத்து நடந்துள்ளதால் வெடிமருந்து அல்லது வெடிகுண்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரான சீனுவாசனிடமும் காவல்துறை விசாரித்து வருகிறது.

Related Stories: