தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்லும் மாணவர்கள்

*உயர்மட்ட பாலம் அமைத்து தர வலியுறுத்தல்

வேப்பனஹள்ளி :  வேப்பனஹள்ளி அருகே, தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி ஆபத்தான முறையில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், ஆந்திர மாநில ஓ.என்.கொத்தூர் பகுதிகளிலும் பெய்த தொடர் மழையால், வேப்பனஹள்ளி ஆற்றில் 30 ஆண்டுக்கு பிறகு கடந்த வாரம் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோரம் உள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

தடதரை அருகே ஆற்றுக்கு மறுபுறம் உள்ள இனாம் குட்டப்பள்ளி கிராமத்தில், சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு சென்று வர ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆற்றை தாண்டி வர முடியாமல் முடங்கினர்.

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். தற்போது, வெள்ளம் ஓரளவு குறைந்துள்ளதால், கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி, ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More