நடமாடும் கடைகளை உருவாக்கி மலிவு விலையில் காய்கறி விற்கலாம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: காய்கறிகள் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமைக் கடைகள் மூலம் பொதுவாக அனைத்துக் காய்கறிகளும், குறிப்பாக தக்காளியும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்ததுதான் தற்போது விலை உயர்வுக்கு காரணம். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும், தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, மராட்டியம் வரை இதேநிலை தான் என்பதால் சந்தை சமநிலை மூலம் காய்கறிகள், தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப்போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: