கார்த்திகை மாதம் பிறந்ததால் வியாபாரம் பாதிப்பு மேலப்பாளையம் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்-தென் மாவட்ட வியாபாரிகள் ஏமாற்றம்

நெல்லை :  கார்த்திகை மாதம் பிறந்ததால் மேலப்பாளையம் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நேற்று வழக்கத்தைவிட  குறைவாக இருந்தது. இதனால் தென் மாவட்ட வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.நெல்லை மாநகராட்சி  மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள வாரச்சந்தையில் திங்கட்கிழமை தோறும்  மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமை தோறும் ஆடு, கோழி சந்தையும் கூடுகிறது.  இந்த நாட்களில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு வந்து  விற்பனை செய்கின்றனர். நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பார்கள்.

இதுபோல்  தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை மற்றும் விழா  நாட்களில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில்  தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பலர் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.   குறிப்பாக முருக பக்தர்கள் மற்றும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்  விரதம் மேற்கொள்வதால் அசைவ உணவிற்கான தேவை குறைந்துள்ளது.

இதனால்  சந்தைகளில் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவற்றின் விற்பனையும் சரிந்துள்ளது.மேலப்பாளையம்  வாரச்சந்தை நேற்று காலை கூடிய போது மிகக்குறைந்த அளவிலேயே வியாபாரிகள்  ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவற்றை வாங்குவதற்கு வந்தவர்கள்  எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக ஆட்டுக்குட்டிகள் அதிகளவில்  விலை போகும். நல்ல சீசன் நாட்களில் ஒரு ஆட்டுக்குட்டி 3 ஆயிரம் ரூபாய்க்கும்  அதிகமான விலைக்கு செல்லும். இது ரூ.5 ஆயிரம் வரை எட்டிய நாட்களும் உண்டு.  இந்த நிலையில் நேற்று குறைந்த அளவில் விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள்  விலை போகாததால் வியாபாரிகளை அவற்றை நீண்ட நேரம் வைத்திருந்து  காத்திருந்தனர். 10 ஆட்டுக்குட்டிகளை வாங்குபவர்கள் அதிகபட்சமாக 3  ஆட்டுக்குட்டிகளை வாங்கினர்.

இதனால் ஆடுகளை கொண்டு வந்த தென் மாவட்ட வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.இதன் விலையும் வழக்கத்தைவிட  குறைந்தது. பொதுவாக மழைக்காலங்களில் அசைவ உணவை பலர் தவிர்ப்பார்கள். தற்போது  விரத கால சீசனும் தொடங்கியுள்ளதால் இதன் விற்பனை சரிந்துள்ளது. மார்கழி  மாதம் முடியும் வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: