பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளின் தகவல் தெரிவித்தால் வெகுமதி-மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தகவல்

ராணிப்பேட்டை : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை ஆணை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர்  பைகள், பாக்கெட்கள், உறிஞ்சு குழல்கள், கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைத்தல்,  விநியோகித்தல், போக்குவரத்து செய்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இத்தடை ஆணையை செயல்படுத்த தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள், மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, நெடுஞ்சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல் போன்றவை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள், நிறுவனங்களுக்குள் மற்றும் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படுவதால் அதன் உற்பத்தியாளர்களை கண்டறிவது கடினமாக உள்ளது. அரசுத்துறையின் அனுமதியின்றி இத்தகைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் குறித்து அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் தெரிவிக்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார்தாரரின் ரகசியம் காக்கப்படும்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் தகவல்களை தெரிவிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களின் தொடர்பு விவரங்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘tnpcb.gov.in/contact.php’  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் பெயர், முகவரி, மற்றும் தொலைபேசி எண் ஆகியவை அளிக்க வேண்டும். இதன் மூலமாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் கொடுப்பது தடுக்கப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: