கலவை : கலவை தாலுகாவில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், கலவை தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்தன. மேலும், மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும், நெற்பயிரில் சூழ்ந்த மழைநீர் வடியாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக கலவை, அகரம், கலவை புத்தூர், மேல்நேத்தபாக்கம், குட்டியம், மழையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து அகரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ‘அகரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் விவசாயம் தொழில் செய்து வருகிறோம். மேலும் விவசாயம் செய்வதற்கு வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் பயிர் செய்துள்ளோம்.
தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கன மழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியது. இதனால், நாங்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்புள்ளாகியிருக்கிறோம். மேலும் மழை வீட்டு இரண்டு நாட்களாகியும், நெற்பயிரில் உள்ள மழை நீர் வடியாமல் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.நெமிலி:நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கனமழையின் காரணமாக முழுவதும் நிரம்பி உபரி நீர் தற்போது வெளியேறி கொண்டிருக்கிறது. மேலும், பெரப்பேரி மற்றும் கீழ்வீதி ஆகிய ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய் தூர்வாரப்படாததால், ஏரியில் இருந்து வெளியேரும் உபரி நீர், உளியநல்லூர் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், விளை நிலங்களில் பயிரிட்டுள்ள நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.