கலசபாக்கம் ஒன்றியத்தில் 230 வீடுகள் இடிந்தது வடகிழக்கு பருவமழையால் 782 ஹெக்டேர் பயிர்கள் சேதம்-உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

கலசபாக்கம் : வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. குறிப்பாக கலசபாக்கம் வட்டத்தில் மாவட்டத்திலேயே அதிகளவில் மழை பெய்ததால், மேல்சோழங்குப்பம் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊராட்சி கட்டுப்பாட்டில் 64 ஏரிகளும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 23 ஏரிகள் என மொத்தம் 87 ஏரிகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே நேரத்தில் அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் பாதிப்பு பல மடங்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 650 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், சுமார் 132 ெஹக்டேர் பரப்பளவில் தோட்ட பயிர்களும் மழையால் சேதமடைந்துள்ளன. பல்வேறு கிராமங்களில் 230 வீடுகள் மழையால் இடிந்து விழுந்துள்ளது.

செய்யாற்றில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து ஒருவார காலமாக இருகரை தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சிறுவள்ளூர், கெங்கலமகாதேவி, சிறுவள்ளூர், காந்தபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 6 நடை பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.

அருணகிரி மங்கலம் கிராமத்தில் தொடர் மழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் சேதமடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் செய்யாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுகூகு உரிய நிவாரணம் கிடைத்திட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீடு இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டி கொடுக்கவும், செய்யாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட நடை பாலங்களை உடனடியாக கட்டிடவும் பல்வேறு கிராமங்களில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதால், இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: