கொடுமைப்படுத்த நினைக்கிறீர்களா? மலைபோல் ஆவணம் தாக்கல் தலைமை நீதிபதி கடுங்கோபம்

புதுடெல்லி: பியூச்சர் குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே, பியூச்சர் குழுமத்தின் பங்குகளை விற்பதாக இருந்தால் அமேசான் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கிடையே இக்குழுமத்தின் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை மொத்தாக வாங்க அமேசான் முயற்சி செய்தது. ஆனால், அதற்குள் பியூச்சர் ரீடைல் நிறுவனம் ரிலையன்சுக்கு விற்கப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக அமேசான்-பியூச்சர் நிறுவனங்கள் இடையே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் கட்டுகட்டாக ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து தலைமை நீதிபதி ரமணா கடுப்பானார். அவர், ‘22-23 தொகுதிகளாக ஆவணங்களை தாக்கல் செய்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம். இதெல்லாம் வழக்கை இழுத்தடிக்கவா அல்லது எங்களை கொடுமை செய்யவா? உங்கள் நோக்கம்தான் என்ன?’ என கடுமையாக கண்டித்தார். அதோடு, சுருக்கமாக அனைத்து தரப்பும் சேர்ந்து ஒரே ஆவணத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதை இரு தரப்புகளும் ஏற்றுக் கொண்டன. வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: