மன்மோகன் சிங் ஆட்சியில் மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும்: காங். மூத்த தலைவர் மணீஷ் திவாரி திடீர் சர்ச்சை

புதுடெல்லி: ‘நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்ட மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தக்க பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்,’ என்று தனது புத்தகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசில் கட்சித் தலைவர் உட்பட அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தும்படி போர்க்கொடி உயர்த்தி, சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ‘குழு 23’ மூத்த தலைவர்களில் மணீஷ் திவாரியும் ஒருவர். ‘20 ஆண்டுகளில் 10 பிளாஷ் பாயின்ட்’ என்ற தலைப்பில், இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தொகுத்து இவர் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் டிவிட் செய்துள்ளார்.

அவர் தனது புத்தகத்தில் உள்ள விவரம் பற்றி கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு சவால்களை நாடு எதிர்கொண்டதை எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த தாக்குதலில்  நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இழந்தோம். அரசுக்கு கட்டுப்பாடு என்பது வலிமையின் அடையாளம் அல்ல; அது பலவீனத்தின் அடையாளம். சரியான நேரம் வரும் போது, வார்ைதகளை விட செயல்கள்தான் வலிமையாக இருக்க வேண்டும்.

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்களும் வலிமையாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அப்போதைய அரசு தகுந்த பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதே போன்று, மோடி தலைமையிலான பாஜ அரசும் சீனாவுக்கு எதிரான ‘மவுண்டன் ஸ்டிரைக் கார்ப்ஸ்’ படையை அகற்றியது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அவமானம். இந்த படைகளுக்கு நிதியுதவியை உயர்த்தி பயிற்சிகளை மேம்படுத்தி இருந்தால் டோக்லாமில் அசல் எல்லைக்கோட்டு பகுதியில் தற்போது பெருகி வரும் அழுத்தம் தவிர்க்கப்பட்டிருக்க கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: