செல்போன் செயலி மூலம் வாக்களிக்கும் முறை; அனல் பறக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல்: மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் 7 பேர் போட்டி.!

சென்னை:  தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள அசன் மவுலானா எம்எல்ஏவின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர் காங்கிரசில் மாநில அளவில் 34 பதவிகளும், மாவட்ட அளவில் 24 பதவிகளும் உள்ளன. இந்த இடங்களில் எல்லாம் தங்கள் ஆதரவாளர்கள் பொறுப்புக்கு வந்தால் தான் கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் எனக் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி தலைவர்கள் கருதுகின்றனர். இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பொறுத்தவரை இந்த முறை செல்போன் ஆப் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது.  அதன் அடிப்படையிலே தமிழகத்திலும் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஆப் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. அத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கையும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. அதாவது, புதிய உறுப்பினர்களாக சேருகிறவர்களும் ஆப் மூலம் மட்டுமே கட்சியில் இணைய முடியும். அவர்களும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் வகையில் வாக்களிக்கலாம். இந்த முறையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 8ம்தேதி முதல் வாக்குப்பதிவுடன் கூடிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. அடுத்த மாதம் 7ம்தேதி முடிவடைகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உறுப்பினர் சேர்க்கையுடன் கூடிய வாக்களிக்கும் பணி முடிவடைந்ததும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் குழுவினர் அதை ஆய்வு செய்து வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிவிப்பார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் அதிக வாக்குகள் பெறுபவர் தலைவராக அறிவிக்கப்படுவார். அடுத்தடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் துணை தலைவர்களாக 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார் ஆதரவாளர்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக வெற்றிபெற்ற அசன் மவுலானாவும், ஊர்வசி அமிர்தராஜூம், மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள்.

அவர்கள் இருவருமே இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதை வைத்து மாணிக்கம் தாகூரை நம்பினால் எதிர்காலம் என்ற பரப்புரையை அவரது தரப்பினர் முன்னெடுத்துள்ளனர். எனவே, மாணிக்கம் தாகூர் ஆதரவாளரான கோவையை சேர்ந்த ஜி.ஆர்.நவீன் குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜவில் கொங்குமண்டலத்தை சேர்ந்த அண்ணாமலை மாநில தலைவராக இருப்பதால்,  இளைஞர் காங்கிரஸ் தலைவராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை கொண்டுவர  விரும்புவதால் தான் நவீன் குமாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சற்றும் சளைக்காமல் கார்த்தி சிதம்பரம் தரப்பும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

அவரது சார்பில் ஜோஸ்வா ஜெரால்டு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே மாணவர் காங்கிரஸ் நிர்வாகியாக இருக்கும் அஸ்வத்தாமன் தரப்பும் தங்கள் பங்குக்கு இந்த கோதாவில் குதித்துள்ளது. மேலும் டாக்டர் செல்லக்குமாரும் தனது பங்கிற்கு நரேந்திர தேவ் என்பவரை களத்தில் இறக்கியுள்ளார். இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டவர் என்பதாலும், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாலும் தனது ஆதரவாளர் ஒருவரை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது. இப்படி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ள நிலையில் 7 பேர் போட்டியிடுகின்றனர். மூத்த தலைவர்களின் பின்புலத்துடன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதால் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையுடன் கூடிய தேர்தலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: