புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய குழு ஆய்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் அவதி அடைந்தார்கள். தொடர்ந்து புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன் அடிப்படையில் ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு புதுச்சேரி வந்தடைந்து, முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசையை சந்தித்து பேசினார்கள். பின்பு புதுவையில் மழை பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திவிட்டு இரவு புதுச்சேரியில் தங்கினர். இந்நிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் கிராமப்பகுதியான மணவெளி தொகுதியில் உள்ள என்.ஆர். நகர்ப்பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய குழு ஆய்வு செய்கிறது. பாகூர் கிராம பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகள், முள்ளோடை பகுதியில் சேதமடைந்த மின்சாதன பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்துவிட்டு 10.30 மணியளவில் ஒன்றிய குழு கடலூர் செல்லவிருக்கிறது.

Related Stories: