விழுப்புரம் அருகே பரபரப்பு: கும்பகோணம் நான்கு வழிச்சாலையில் புதிய பாலம் உள்வாங்கியது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்ட பாலம் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டன. பல இடங்களில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனிடையே விழுப்புரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பாலமும் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆறுகள், ஓடைகளில் கடந்து செல்லும் இடங்களில் புதிய கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் அடுத்துள்ள குச்சிபாளையம் பகுதியில் கடந்து செல்லும் மலட்டாற்றின் மேலே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த பாலத்தின் வழியாக காட்டாற்று வெள்ளம் சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை திடீரென பாலத்தின் பக்கவாட்டு பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 20 அடி ஆழத்துக்கு மேல் பாலம் உள்வாங்கியது. இதனால் அங்கு நின்று தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த சாலை வழியாக போக்குவரத்துகள் செல்லாத வகையில் கற்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதுகுறித்த தகவலறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாற்று சாலையில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். மேலும் நெடுஞ்சாலை துறையினர் அங்கு விரைந்து வந்து தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட பாலம் ஓராண்டு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் காட்டாற்று வெள்ளத்தில் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: