திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் கிரிவலம் ரத்து

* கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி பவனி

* பக்தர்கள் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடு

திருவண்ணாமலை: கார்த்திைக தீபத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கிரிவலம் வரும் நிகழ்வு நேற்று ரத்து செய்யப்பட்டது. எனவே, கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் அண்ணாமலையார் கிரிவலம் சிறப்புக்குரியது. மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட 2வது நாளன்று காலை, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் அலங்கார ரூபத்தில் 14 கிமீ தூரம் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் திருவூடல் திருவிழாவின்போதும், கார்த்திகை தீபத்திருவிழாவின் போதும் மட்டுமே அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள்தருவார். இறைவடிவான தீபமலையை, இறைவனே வலம் வரும் காட்சியை தரிசிப்பது மிகவும் விஷேசமானது.

இந்நிலையில், தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த முறையும் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மகாதீபம் ஏற்றப்பட்ட 3வது தினமான நேற்று அண்ணாமலையார் கிரிவலம் கிரிவலப்பாதையில் நடைபெறவில்லை.அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி கிரிவலம் நேற்று காலை நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகிேயார், ஆயிரங்கால் மண்டபம் அருகே எழுந்தருளி, 5ம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தனர்.மேலும், கோயில் பிரகாரத்துக்குள் நடந்த சுவாமி கிரிவலத்தை தரிசிக்கவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்ைல. அதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சுவாமி கிரிவல நிகழ்வுக்கு அனுமதி அளித்திருக்கலாம் என பக்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்று இ-டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பக்தர்கள் இ-டிக்கெட் முன்பதிவு செய்யாமல் கோயிலில் தரிசனத்துக்கு திரண்டனர். எனவே, இ-டிக்கெட் இல்லாத பக்தர்களும் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், தீபத்திருவிழா முடிந்துவிட்டதாலும், இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாகவும், கோயிலில் தரிசனம் செய்ய இ-டிக்கெட் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: