சூடானில் திடீர் திருப்பம் பிரதமர் அப்தல்லாவிடம் ஆட்சியை தரும் ராணுவம்

கெய்ரோ: சூடானில் திடீர் திருப்பமாக அரசியல் தலைவர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. கைதான பிரதமர் அப்தல்லாவிடம் மீண்டும் ஆட்சியை தர ராணுவம் சம்மதித்துள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 1989ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வந்த அதிபர் ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா். அந்த அரசை ராணுவம் கடந்த மாதம் 25ம் தேதி கலைத்தது. நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தியது.

பிரதமர் அப்தல்லா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக சூடானில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரே நாளில் 15 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ராணுவத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். இதன்படி, மீண்டும் பிரதமர் அப்தல்லாவிடம் மீண்டும் பொறுப்பை ஒப்படைக்க ராணுவம் சம்மதித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories: