ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் பாலாற்று வெள்ளத்தில் உருண்டு சென்ற உறை கிணறு:சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உருண்டு சென்ற உறை கிணற்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது. மேலும் அண்டை மாநிலங்களில்   உபரிநீர் மிக அதிகளவில் வெளியேற்றப்படுவதால் பாலாறு நிரம்பி வழிகிறது.

இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டிலிருந்து 118 ஆண்டுகள் கழித்து  ஒரு லட்சம் கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. அதேபோல் பல இடங்களில் நீர் ஊருக்குள் புகுந்து  பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில், வாலாஜா, ராணிப்பேட்டை,   திமிரி மற்றும்  30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வாலாஜா அடுத்த வன்னிவேடு பாலாற்றில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுகிறது. பல கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுகிறது.

வன்னிவேடு பாலாற்றின் நடுவே  40க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பைப் மூலமாக  கரை ஓரத்தில் உள்ள பம்பு ஹவுஸ்  பகுதியில் உள்ள மற்றொரு கிணற்றிற்கு தண்ணீர் செல்லும். அதிலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு  வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் வாலாஜா வன்னிவேடு பகுதியில் பாலாற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறு ஒன்று பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாய்ந்தோடும் பாலாற்று வெள்ளத்தில் அந்த உறை கிணறு உருண்டோடியபடி செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில், வடிவேலு கிணற்றை காணோம் என்ற காமெடி ஆடியோவுடன் இணைத்து வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

பாலாற்றில் அடித்து ெசல்லப்பட்ட உறை கிணறு, எந்த பகுதியில் இருந்து அடித்து வரப்பட்டது என்பது தண்ணீர் வடிந்தபிறகு தான் தெரியவரும் என்று வாலாஜா நகராட்சி  ஊழியர்கள் தெரிவித்தனர்.  அதோடு பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக  குடிநீர் விநியோகம் செய்து வரும் பணிகளும் தடைபட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்கு அலைந்து வருகின்றனர்.

Related Stories: