இன்று சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் நாளைய நாட்டின் சிற்பிகளுக்கு நம்பிக்கையூட்டி வளர்ப்போம்

சேலம் : ஒன்று முதல் 18வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்ற பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு இனம், மதம், நிறம், பாலினம், கருத்து, செல்வம், திறன் ஆகியவற்றை கடந்து குறைந்தபட்சம் உரிமைகள் மற்றும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இதில் உரிமைகள் என்பது வாழும் உரிமை, பாதுகாக்கப்படும் உரிமை, பங்கேற்கும் உரிமை, முன்னேற்ற உரிமை என்று நான்காக வகுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மொழி, இன, மத, வேறுபாடுகளை கடந்து குழந்தைகளின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல், கலாச்சார குடியுரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று 1989ம் ஆண்டு, நவம்பர் 20ம்தேதி ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றியது. இதை வலியுறுத்தும் வகையில்  ஆண்டு தோறும் சர்வதேச குழந்தைகள் உரிமைகள் தினம் நவம்பர் 20ம்தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது.

‘உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கடவுள் மனித குலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை’  என்ற செய்தியை நமக்கு சொல்கிறது என்றார் கவிஞர் ரவீந்திரநாத்தாகூர். இப்படி ஒப்பற்ற பொக்கிஷங்களாக இந்த பூமிக்கு வரும் குழந்தைகளை கொண்டாட வேண்டியது நமது தலையாய கடமை. ஆனால் 30சதவீத பெற்றோர் இதில் போதிய அக்கரை காட்டுவதில்லை. அதிலும் குழந்தைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதும் பெருத்த வேதனை.

அதேநேரத்தில் உணவின்றி தவிப்பு, நோய்களால் இறப்பு, ஊட்டச்சத்து இல்லாமல் ஊனம், பாகுபாடுகள் காட்டி ஏளனம், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கும் குரூரம், தொழிலாளிகளாய் அலையவிடும் அவலம் என்று அவர்களை துண்டாடப்படுவது கொடுமை.நாளுக்கு நாள் அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

அதிலும் நவீனவளர்ச்சியில் நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் மட்டும் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இதில் தமிழகத்தில் கடந்த 5ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.    

கொரோனா காலகட்டத்தில் 10ஆண்டுகளில் இல்லாத வகையில் உருவான 20சதவீதம் குழந்தை தொழிலாளர்கள், குக்கிராமங்கள், மலைகிராமங்கள் மட்டுமன்றி ஊரகப்பகுதிகளிலும் 30சதவீதம் அதிகரித்த குழந்தை திருமணங்கள், 7சதவீத குழந்தைகளின் கல்வி இடைநிற்றல், வறுமையால் கொத்தடிமைகளாய் சிக்கித்தவிக்கும் குழந்தை தொழிலாளர்கள் என்று அவலங்கள் தொடர்ந்து அரங்கேறியதும் இதற்கான சான்றுகள். ஒரு வீட்டிற்கு மகிழ்வையும், நிறைவையும் தருவது குழந்தைச் செல்வம்.

அவர்களே நாட்டிற்கும் செல்வங்கள் என்றால் அதுமிகையல்ல. எனவே குழந்தைகளின் உரிமைகளை அவர்களுக்கு அளித்து,  நம்பிக்கையூட்டி நல்வாழ்வுக்கு வழிவகுத்தால் அவர்களே நாளை, நாட்டின் வளர்ச்சிக்கான நவீன சிற்பிகளாகவும் உயர்ந்து நிற்பார்கள் என்பது மட்டும் நிதர்சனம் என்கின்றனர் குழந்தைகள் நல மேம்பாட்டு ஆர்வலர்கள்.

Related Stories: