நெல்லையில் தொடரும் மழை தாமிரபரணியில் கரை புரளும் தண்ணீர்-மணிமுத்தாறு அணை 92 அடியாக உயர்ந்தது

நெல்லை : நெல்லையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

இதனால் அணைகளில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர், காட்டாற்று வெள்ளம் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லையில் நேற்று காலை முதல் வெயில் நிலவியது. எனினும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சுமார் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னரும் 2 மணி வரை சாரல் மழை இருந்தது. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139.75 அடியாக உள்ளது. விநாடிக்கு 1419 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1698 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.06 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 91.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 398 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது. நம்பியாறு அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் 450 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணையும் நிரம்பி வழிகிறது. அணைக்கு விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் வருகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் கடனாநதி அணைக்கு வரும் 205 கன அடி தண்ணீர், ராமநதி அணைக்கு வரும் 30 கன அடி தண்ணீர், கருப்பாநதி அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர், குண்டாறு அணைக்கு வரும் 52 கன அடி தண்ணீர், அடவிநயினார் அணைக்கு வரும் 35 கன அடி தண்ணீர் ஆகியவை அப்படியே வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, தென்காசி, சங்கரன்கோவிலில் தலா 1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: