பணகுடி பைபாஸ் ரோடு பணி சர்வீஸ் ரோட்டிற்காக நீர்வழி கால்வாய் ஆக்கிரமிப்பு-விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

பணகுடி : பணகுடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டிற்காக விளை நிலங்களுக்கு செல்லும் ஆலந்துறை நீர்வழி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் விவசாயிகள் மற்றும் அனுமன் நதி மீட்பு குழுவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பணகுடியில் பைபாஸ் ரோடு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீட்டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பணகுடி தெற்கு மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் அமைக்கும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் சுமார் 17 அடி அகலம் கொண்ட ஆலந்துறை ஆற்றின் கிளை நீர்வழி கால்வாய், மேம்பால சர்வீஸ் ரோடு விரிவாகத்திற்காக 3 அடி அகலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் நீரின் போக்கு தடைபட்டு கடந்த சில நாட்களாக பைபாஸ் ரோட்டில்  தண்ணீர் நிரம்பி வழிந்தது. மேலும் காளி புதுக்குளம், விநாயகர் புதுக்குளம், பெருமாள் புதுக்குளம் போன்றவை விரைவில் நிரம்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை கண்டித்து நேற்று பணகுடி விவசாயிகள், அனுமன் நதி மீட்பு குழுவினர், ராதாபுரம் நுகர்வோர் சங்கம், நீர்நிலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் திரண்டனர். தெற்கு மேம்பால பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த மேற்பார்வையாளர்களிடம் இதுகுறித்து சரமாரி கேள்வி எழுப்பினர். தகவலறிந்து வடக்கன்குளம் பொதுப்பணித்துறை  உதவி இன்ஜினியர் சுபாஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கிருந்த பணியாளர்களிடம்  17 அடி அகலம் கொண்ட நீர்வழி கால்வாய் அமைக்கும் வரை தற்காலிகமாக பணிகளை நிறுத்துமாறு கூறினார்.

Related Stories: