முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு எங்கள் உரிமையில் தலையிடக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எங்களுக்கான உரிமையில் தலையிடக் கூடாது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்கக் கோரியும், அணை பாதுகாப்பும், இயக்க நடைமுறைகளும் சரியாக இல்லை என்றும் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதில், தமிழக அரசு நேற்று புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அணையில் 142 அடிக்கு கீழாக நீரை தேக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில், இது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். மேலும், தமிழகத்தின் உரிமையில் தலையிடுவதாகும். அதை கைவிட வேண்டும்.

அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் தரவுகள் கண்மூடித்தனமாக ஏற்று கொள்ளப்பட்டவை என்று கூறுவது தவறானது. மனுதாரர் சுட்டிக்காட்டிய கனடா பல்கலைக் கழக ஆய்வுபடி அணையின் வயது காரணமாக அது அபாயகரமானது எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், அதே பல்கலைக் கழகத்தின் ஆய்வில், அணையின் பலவீனம், செயலிழப்பு என்பது அதன் வயதை வைத்து கணக்கிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணை நில அதிர்வுகளை தாங்குமா என்பது ஒன்றிய அரசின் நீர் மற்றும் ஆற்றல் ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அணை நில அதிர்வுகளை தாங்கும் எனவும், அணையில் 152 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம் எனவும் தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டது.

 நில நடுக்கம், பெருவெள்ளம் ஆகியவற்றை அணை தாங்குமா, கட்டமைப்பு ரீதியாக பலமாக உள்ளதா, நீர் கசிவு எந்த அளவு உள்ளது என்பது பற்றி 40 முறை சோதனை நடத்தப்பட்ட பிறகு, அணை பலமாக உள்ளதாக பாதுகாப்பு குழு தெரிவித்ததை உச்ச நீதிமன்றமும் கடந்த 2014ல் ஏற்றுக்கொண்டது. அணையில் எந்த விரிசலும் இல்லை என தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது. ஒரு அணையின் ஆயுள் என்பது வரையறுக்கப்படவில்லை, ஆனால், அணையின் ஆயுள்  என்பது அதன் பராமரிப்பு, புனரமைத்தல், புத்தாக்கம் உள்ளிட்ட  நடவடிக்கையில் தான் உள்ளது என நிபுணர் குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அணை பாதிப்பை முல்லைப் பெரியாறு அணையோடு ஒப்பிட முடியாது. ஏனெனில், இது நிலநடுக்க அபாயம் குறைவாக உள்ள  3ம் மண்டலத்தில் இந்த அணை அமைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கட்டும்போது, அதன் ஆயுள் 50 ஆண்டுள் மட்டுமே நிர்ணியிக்கப்பட்டதாக மனுதாரர் கூறுவது முற்றிலும் தவறானது. எந்த அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் இல்லாதது. அணையின் நீர் கசிவு தரவுகள், அணையின் நிலவரம், நீர் வரத்து, வெளியேற்றம், நீர் திறப்பு நீர் தேக்குதல் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் கேரள அரசுக்கு அவ்வப்போது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அணையில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகள் செயல்பாட்டில் தான் உள்ளன. எனவே, மனுதாரர் மனு உள்நோக்கம் கொண்டது. இது, அணையில் நீர் தேக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த விடாமல் தடுக்கும் ஒரு முயற்சியாகும்.

தவறான தகவல்கள், தரவுகளை தந்து நீதிமன்றத்தை அவர் தவறாக நடத்த முயல்கிறார். அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து நடைமுறைகளையும் கச்சிதமாக திட்டமிட்டு கடைபிடித்து வருகிறது. எனவே, ஏற்கனவே அணை இயக்க முறை தொடர்பாக ஒன்றிய நீர் வள ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து முடித்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: