கன மழையால் 400 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கேடிசி நகர் : தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் தாமிரபரணியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 3 தினங்களாக மழை குறைந்ததால் ஆற்றில் வெள்ளம் தணிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, நெல்லை மாவட்டத்தில் இடைவிடாமல் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக டவுன் சேரன்மகாதேவி சாலை, குற்றாலம் சாலை, மேலப்பாளையம் - ரெட்டியார்பட்டி சாலை, வண்ணார்பேட்டை, மார்க்கெட், சீவலப்பேரி ரோடு, சாந்திநகர், மனகாவலம்பிள்ளை நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. பாளை. கேடிசிநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து இருச்சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

கேடிசி நகர் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவ கல்லூரியிலும் தண்ணீர் புகுந்தது. மேலும் ஐகிரவுண்ட் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் அண்ணாநகரில் புகுந்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்டு  வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரை வடிய வைத்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை உழவர் சந்தை செல்லும் பாதையில் கண் தெரியாதோர் பள்ளி முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாந்திநகர், மனகாவலம்பிள்ளை நகர், நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து சாராள்தக்கர் கல்லூரி செல்லும் 60 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதுபோல் சேவியர் காலனி பகுதிகளிலும் பல தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டனர். மாநகரம் முழுவதும் நேற்றுமுன்தினம் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

நெல்லையில் கலெக்டர் விஷ்ணு ெசய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம்  சராசரியாக 46 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் பாளையங்கோட்டை, நாங்குநேரி  பகுதிகளில் 3 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது. பாளையில் மட்டும் 85  மி.மீ. மழை பெய்துள்ளதால் நேற்று முன்தினம் இரவு தாழ்வான பகுதிகளில் வெள்ள பாதிப்பு  ஏற்பட்டது. அந்த பகுதிகளில் மாநகராட்சி, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து  இரவோடு இரவாக தண்ணீரை வெளியேற்றினர்.

கேடிசி நகர், மனகாவலம்பிள்ளை நகர்,  அன்புநகர், சேவியர் காலனி ஆகிய பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  பொதுமக்கள் அச்சப்படும் சூழல் தற்போது இல்லை. பெருமாள்புரம் தற்காலிக  பஸ்நிலையத்தில் 3 மணி நேரம் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த  தண்ணீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள்  உள்ளன. இதில் பாபநாசம், நம்பியாறு அணைகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

மணிமுத்தாறு அணை 55 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. எனினும், மழை பெய்து  வருவதால் அனைத்து அணைகளும் கண்காணிக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில்  தற்போது 6 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் மட்டுமே செல்கிறது. எனினும் தொடர்ந்து மழை பெய்வதால், தற்போதைய சூழ்நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்லக்கூடாது. செல்பி  எடுக்கக் கூடாது. கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  பாபநாசம் அணையில் இருந்து தற்போது ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு  வருகிறது. இத்துடன் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலப்பதால் 6 ஆயிரம்  கனஅடி தண்ணீர் வருகிறது.

மனகாவலம் பிள்ளை நகரை பொறுத்தவரை  முன்பு சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடும். தற்போது மாவட்ட  நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மழைக்கு முன்பாக தண்ணீர் வடிந்து  செல்லும் பகுதியை சீரமைத்து வெட்டுவான் குழிக்கு தண்ணீர் செல்ல வழி  ஏற்படுத்தப்பட்டது. இதனால் நேற்று 3 மணி நேரம் கனமழை பெய்தபோதும் பெரிய  பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தண்ணீர் வடிந்து சென்று விட்டது. சாலைகளைப்  பொருத்தவரை தற்போது தற்காலிகமாக ஜல்லிகற்கள் நிரப்பி உடைப்புகள் சரி  செய்யப்படுகிறது. மழை நின்றபின்னர் மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: