திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் கனமழை 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

* 240 வீடுகள் இடிந்து சேதம்; 5 மாடுகள் பலி

* சாத்தனூர் அணையில் 4,800 கனஅடி நீர் வெளியேற்றம்

* ஏரிகளின் உபரிநீரால் பெருக்கெடுக்கும் வெள்ளம்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடரும் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. மேலும், அணைகள் மற்றும் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவண்ணாமலை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

மேலும், மாவட்டம் முழுவதும் 1,115 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. மேலும், முழுமையாக நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், நீர்வடி கால்வாய்கள் வழியாக உள்ள விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியிருக்கிறது. அதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 தொடர்ந்து மழை நீடித்தால், மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 230 வீடுகள் இடிந்து விழுந்து சேதடைந்திருக்கிறது. மேலும், 5 மாடுகள் கொட்டகை இடிந்து விழுந்ததில் பலியாகியிருக்கிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலையில் 115 மிமீ மழை பதிவானது. மேலும், ஜமுனாமரத்தூரில் 84.60 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 96 மிமீ, தண்டராம்பட்டில் 99 மிமீ, செங்கத்தில் 82.88 மிமீ, கலசபாக்கத்தில் 83.8 மிமீ, ஜமுனாமரத்தூரில் 77.7 மிமீ, போளூரில் 49.1 மிமீ, ஆரணியில் 77 மிமீ, சேத்துப்பட்டில் 80 மிமீ, வந்தவாசியில் 86 மிமீ, செய்யாறில் 89 மிமீ, வெம்பாக்கத்தில் 113 மிமீ மழை பதிவானது.

ஜவ்வாதுமலை பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் செய்யாறு, கமண்டல நாகநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இந்நிலையில், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,800 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதய நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. மதகுகள் சீரமைப்பு பணி நடப்பதால், இந்த அளவுக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது. எனவே, அணைக்கு வரும் 4,800 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மிருகண்டா அணையின் நீர்மட்டம் 19.35 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.மேலும், போளூர் தாலுகா படவேடு பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 54.88 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 6,800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 78 சிறப்பு முகாம்களில், 1,800 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: