தமிழக அரசு கேட்கும் நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

தஞ்சை: தொடர் மழை பாதிப்பு குறித்த அறிக்கையின்படி தமிழக அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் போதுமானதல்ல. ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதைய அறிவிப்பை முதல்வர் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையை திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் கொடுத்து ரூ.6,629 கோடி வழங்குமாறு கோரியுள்ளார். தமிழக அரசு கேட்கும் நிவாரண தொகையை, ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஜெய்பீம் படம் குறித்து இரு கட்சிகள் மட்டுமே அவதூறும், மிரட்டலும் செய்து வருகின்றன. இதன் மூலம், தங்களது கட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் இரு கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்த குறுகிய நோக்கம் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: