டெல்லி எல்லையில் சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தம்!: காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புது உத்தரவு..!!

டெல்லி: டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக அத்யாவசிய வாகனங்கள் தவிர்த்து மற்ற பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் சரக்கு லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்திருப்பதை அடுத்து அதை கட்டுப்படுத்த அரசு சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. பள்ளி, கல்லூரி, நூலகங்கள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு வரும் 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. அத்யாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று இரவு டெல்லிக்கு வந்த லாரிகள் டெல்லி குர்கான் எல்லையிலும், திக்கு எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. கேஸ் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே காற்று மாசுபாட்டு சான்றிதழ் இருந்தும் தங்களது வாகனங்களை நிறுத்தியது ஏன்? என லாரி டிரைவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் நடத்தினர். டெல்லியை தொடர்ந்து அரியானா அரசும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக ஒற்றை இலக்க பதிவெண் வாகன நடைமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் எந்தெந்த வகையில் மாசை குறைக்கலாம் என இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். இதற்கிடையே காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காசியாபாத், கவுதம் புத்தாநகர், மீரட், முஸாபர் நகர் பகுதிகளில் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உத்திரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் விலக்கிக் கொண்டது.

Related Stories: