இந்தியா பற்றி அவதூறு கருத்து அமெரிக்காவில் பேசிய நடிகர் மீது புகார்

புதுடெல்லி: அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள ஜான் எப் கென்னடி மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் பேசுகையில், ‘நான் இரண்டு இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். கொரோனாவுக்கு எதிரான போர், பாலியல் பலாத்கார சம்பவங்கள், நடிகர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, விவசாயிகள் போராட்டங்கள் போன்ற பல பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அதே நேரம் நாங்கள் பெண்களை பகலில் வணங்குகிறோம். இரவில் அவர்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறோம். எங்கள் தேசத்தில் ஒளியும் இருளும், நன்மையும் தீமையும் உள்ளன. இவற்றில் எதுவும் ரகசியம் இல்லை.

எனவே, மக்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களிடையே அன்பை பரப்புங்கள்’ என்று பேசினார். அவரது பேச்சை கேட்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், வீர் தாஸ் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் தரக்குறைவான கருத்துகளை பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டெல்லியின் திலக் மார்க் காவல் நிலைய போலீசார், வீர் தாசுக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: