மழைநீர் சேகரிப்பில் முன் மாதிரியாகத் திகழும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிராமம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொன்னங்களிக்கால் ஓடை வழியாக மழைநீர் சேதுக்கரை கடலில் கலப்பது வழக்கம். வறண்ட பூமியான இப்பகுதியில் கோடையில் வறட்சி நிலவும் என்பதால் மழைக்காலத்தில் கடலில் வீணாக கலக்கும் நீரை சேர்த்துவைக்க முடிவு செய்தனர் திருப்புல்லாணி கிராமத்தினர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அதற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கினர்.

பொன்னங்களிக்கால் ஓடையில் இருந்து அரை கி.மீ தூரத்திற்கு ஊரணிகளுக்கு கால்வாய்களை அமைத்து பருவமழைக்காக தயாராக இருந்தனர். பருவமழை தொடங்கி ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியதும் மழைநீரை சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். முதலில் 2 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் பொன்னங்களிக்கால் ஓடையில் இருந்து வாய்க்கால் வழியாக 40 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கிடங்குக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு மேலும் 2 மின் மோட்டார்கள் மூலம் 15 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய மதகு குட்டம் ஓரணியில் மழைநீர் திருப்பிவிடப்பட்டது. அந்த ஊரணி நிரம்பியதும் அடுத்து 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள சக்கர தீர்த்தம் தெப்பக்குளம் அதை தொடர்ந்து 2 ஏக்கர் பரப்பளவுள்ள முஸ்லீம் தெரு குடியிருப்பு, 12 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார் குட்டம் என 4 ஊரணிகளிலும் அடுத்தடுத்து நீர் தேக்கிவைக்கப்பட்டது.

அனைத்து ஊரணிகளும் நிரம்பி வழிவதால் திருப்புல்லாணியை சுற்றியுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகளும் பொதுமக்களும் ஊரணிகளில் இருந்து தங்களுக்கு தேவையான நீரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்புல்லாணி பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் உப்புக்கரித்து கொண்டிருந்தது. தற்போது அந்த நீர் சுவையாக இருப்பதாக அப்பகுதியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். தங்கள் ஊராட்சியை பின்பற்றி மற்ற ஊராட்சிகளும் இதேபோல மழைநீரை தேக்கி வைத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடே இருக்காது என்பது திருப்புல்லாணி கிராமத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: