வாடிக்கையாளர்போல் கையெழுத்திட்டு பிரபல வங்கியில் ரூ.2 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் உட்பட 2 பேர் கைது

அண்ணாநகர்: பிரபல தனியார் வங்கியில் வாடிக்கையாளர்போல் செக் புக்கில் போலியாக கையெழுத்திட்டுரூ.2 லட்சம் மோசடி செய்த வங்கி முன்னாள் ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கண்ணா. இவர் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு வங்கியில் இருந்துரூ.2 லட்சம் எடுத்ததாக எஸ்எம்எஸ் வந்தது. வங்கியில் இருந்து தான் பணம் எதுவும் எடுக்காத நிலையில்ரூ.2 லட்சம் எடுத்ததாக வந்த எஸ்எம்எஸை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, வங்கியின் மேலாளர் ஜோதிகுமார்  அண்ணாநகர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னை அசோக் நகர் 5வது அவென்யூ பகுதியை சேர்ந்த விஜய் வர்மா(26) மற்றும் வங்கியின் முன்னாள் ஊழியரான மதுரவாயல் பகுதியை சேர்ந்த பரத் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பிரசாந்த் கண்ணா பெயரில் செக் புக் வாங்கியதும், அதில் அவரைப்போலவே போலியாக கையெழுத்திட்டுரூ.2 லட்சம் எடுத்தது தெரியவந்தது.  இதையடுத்து, 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: