கவரிங் நகைகளை வைத்து ரூ1.47 கோடி மோசடி: கூட்டுறவு சங்க செயலாளர் இருவர் அதிரடி சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து ரூ.1 கோடியே 47 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சங்க செயலர் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பி.கொடிக்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கிளை கிளியூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் கார்மேகம் இருந்து வருகிறார்.

கிளியூர் கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 300க்கும் மேற்பட்டவர்கள் நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளனர். தற்போது, அரசு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கும் நோக்கில் போலிகளை கண்டறியும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சங்கங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வணிக குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக இங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் நகைகளை வைத்து கடன் பெற்றதில், 81 நபர்களின் பெயரில் உள்ள பாக்கெட்டுகளில் போலியான கவரிங் நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 47 லட்சம் என அதிகாரிகள் விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தனர். மாவட்ட இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உத்தரவின் பேரில், துணை பதிவாளர் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் பி.கொடிக்குளம் கூட்டுறவு சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கிளியூர் சங்க செயலர் இளமதியான், துணை செயலர் முருகேசன் ஆகியோர் துறைரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நகை மதிப்பீட்டாளர் அறிவழகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலியான கவரிங் நகைகளை வைத்து கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தலைவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் மோசடிகள் குறித்து விசாரணை செய்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: