திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

திருப்போரூர்:  கடந்த சில நாட்களாக பெய்த மழை இரண்டு நாட்களாக ஓய்ந்திருந்தாலும் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தாழம்பூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளின் வழியாக வெளியேறி பழைய மாமல்லபுரம் சாலையைக் கடந்து பக்கிங்காம் கால்வாயில் சென்று  சேர்கிறது. இதன் காரணமாக தாழம்பூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைப்பிரிவுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

 அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம், திருப்போரூர் வட்டாட்சியர் இராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சு, வெங்கட்ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வில் தாழம்பூர் ஊராட்சியில் அடங்கிய டி.எல்.எப், காசா கிராண்ட் ஆகிய குடியிருப்பு களிலும், ஜவகர் நகர் செல்லும் சாலையிலும் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தாழம்பூரில் இருந்து தனியார் நிறுவன பேருந்து மூலம் காசா கிராண்ட், எலன் ஆகிய தனியார் குடியிருப்புகளுக்கு சென்று குடியிருப்புகளின் உள்ளே தண்ணீர் தேங்கி இருப்பதையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அடுத்த மழைக்காலத்தில் இது போன்று வெள்ள நீர் தேங்காத வகையில் பாலங்கள் கால்வாய்கள் மூலம் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார், தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: