பசுவின் சாணம், கோமியத்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும்: ம.பி பாஜக முதல்வர் பேச்சு

போபால்: பசுவின் சாணம், கோமியத்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்திய கால்நடை மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பெண் கால்நடை மருத்துவர்களின் மாநாட்டில், அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ‘பசுவின் சாணம் மற்றும் கோமியம் ஆகியன தனிநபரின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். மத்திய பிரதேசத்தில் சடலத்தை எரிப்பதற்காக பெருமளவில் விறகுகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மரங்களை பாதுகாக்கும் பொருட்டு விறகுகள்  பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாட்டுசாணத்தால் செய்யப்பட்ட எரிமட்டைகளை  அதிகளவில் பயன்படுத்த வேண்டும். சிறு விவசாயிகள் மற்றும் கால்நடை  வளர்ப்போர் பசு வளர்ப்பை இலாபகரமான தொழிலாக மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தப் பணிகளில் கால்நடை மருத்துவர்களும், நிபுணர்களும் ஈடுபட வேண்டும். பசுவை பாதுகாப்பதற்காக எங்களது அரசு காப்பகங்களை உருவாக்கியுள்ளது. அரசு மட்டுமே காப்பகங்களை பராமரிக்க முடியாது. சமூக அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம் தேவை’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, ‘குஜராத்தின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பசு வளர்க்கப்படுகின்றன. அந்த தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அம்மாநிலத்தில் பால் பண்ணை தொழில் நன்றாக உள்ளது. எனவே இந்த துறையில் பெண்கள் அதிகளவில் தொழில் முனைவோராக மாற வேண்டும்’ என்று பேசினார்.

Related Stories: