சின்னாளபட்டி புறவழிச்சாலை பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி: தேசிய நான்குவழிச்சாலையிலிருந்து சின்னாளபட்டி புறவழிச்சாலைக்கு வரும் பிரிவு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திண்டுக்கல் - மதுரை நான்குவழிச்சாலையிலிருந்து சின்னாளபட்டிக்கு வரும் புறவழிச்சாலையில் ஆர்.எம்.டி.சி.காலனி, நேருஜிநகர், கலைமகள் மற்றும் காந்திஜி நெசவாளர் காலனி உள்ளது. சின்னாளபட்டியில் உள்ள மேட்டுப்பட்டி மற்றும் கீழக்கோட்டையை சேர்ந்த பொதுமக்களும், செம்பட்டி செல்லும் பொதுமக்களும் அதிக அளவில் சின்னாளபட்டி புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதேபோல திண்டுக்கல்லுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

மாலை 6 மணிக்கு மேல் தேசிய நான்கு வழிச்சாலை இணையும் பகுதியில் (பிரிவு) விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் தடுமாறி விழுவதோடு விபத்திலும் சிக்குகின்றனர். இதுதவிர செட்டியபட்டி பிரிவு, காந்திகிராமம் பாலம் பகுதியில் தெருவிளக்குகள் மற்றும் நெடுஞ்சாலை சாலையோர விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மோதி தொடர் விபத்தும், உயிர்பலியும் ஏற்படுகிறது. இதேபோல திண்டுக்கல்லிலிருந்து புறவழிச்சாலைக்கு வருபவர்களும், சின்னாளபட்டி பிரிவிலிருந்து புறவழிச்சாலைக்கு வருபவர்களும் திரும்பும் போது அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுகிறது. எனவே, சின்னாளபட்டி புறவழிச்சாலை பிரிவில் மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டுமென சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: