போதை வழக்கில் கைதான ஷாருக் மகனிடம் நள்ளிரவு வரை விசாரணை: சமீர் வான்கடேவையும் விசாரிக்க முடிவு

மும்பை: போதை பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகனிடம் நள்ளிரவு வரை போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மும்பை போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மும்பை உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனின் அடிப்படையில் ஆர்யன்கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் நேற்று போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜரான ஆர்யன் கானை, நேற்றிரவு 11.30 வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணை விபரங்களை வீடியோ பதிவில் வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் த்யானேஷ்வர் சிங் கூறுகையில், ‘போதை ெபாருள் வழக்கில் 15 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம். சில முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் சேல் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஆகியோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியின் வாக்குமூலங்களை பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறேம். போதை பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரான ஆர்யன்கான், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்’ என்றார்.

Related Stories: