திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் 657 ஏரிகள் நிரம்பியது

* 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

* 188 வீடுகள் இடிந்து விழுந்தது: 4 மாடுகள் பலி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், 657 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், மழை வெள்ளம் வடியாததால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியிருக்கிறது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதோடு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதன்படி, திருவ்ணணாமலை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது.

பகலில் லேசானது முதல் மிதமான மழையும், இரவில் கனமழையும் வெளுத்து வாங்குகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, செய்யாறில் 54.50 மிமீ மழை பதிவானது. மேலும், ஆரணியில் 25.70 மிமீ, செங்கத்தில் 12.40 மிமீ, ஜமுனாமரத்தூரில் 18.80 மிமீ, வந்தவாசியில் 52.30 மிமீ, போளூரில் 15.70 மிமீ, திருவண்ணாமலையில் 14 மிமீ, தண்டராம்பட்டில் 19 மிமீ, கலசபாக்கத்தில் 11 மிமீ, சேத்துப்பட்டில் 28.20 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 22.20 மிமீ, வெம்பாக்கத்தில் 52.20 மழை பதிவானது.

மேலும், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,890 கனஅடி வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 1,890 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றின் இடது, வலதுபுற கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 97.45 அடியாக உள்ளது.அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 21.32 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 56.51 அடியாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 1.82 லட்சம் திறந்தவெளி பாசன கிணறுகளும் முழுமையாக நிரம்பியிருக்கிறது. அதேபோல், மொத்தமுள்ள 1,984 ஏரிகளில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 335  ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 322 ஏரிகள் உள்பட மொத்தம் 657 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியிருக்கிறது. எனவே, இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுப்பணித்துறையின் 70 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறையின் 288 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அடுத்த சில நாட்களில் கனமழையால் இந்த ஏரிகளும் முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாட்டம் முழுவதும் ஏரிகளை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், கடந்த 4 நாட்களாக பெய்யும் தொடர் மழையால், மாவட்டம் முழுவதும் ெகாட்டகை இடிந்து விழுந்ததில் 4 மாடுகள் பலியாகி உள்ளன. மேலும், 19 வீடுகள் முழுமையாகவும், 169 ஏரிகள் பகுதியாகவும் இடிந்து விழுந்து சேதமடைந்திருக்கிறது.

அதேபோல், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறாமல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால், மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கிறது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளில் நெற்பயிர் சேதம் அதிகமாக உள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பயிர் சேதங்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருப்பதால், அடுத்த 2 நாட்களில் பயிர் சேதம் குறித்த முழுமையான விபரம் தெரியவரும்.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வந்தார். முதற்கட்டமாக, செய்யாறு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கலெக்டர் முருகேஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

78 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக, 70 பள்ளிகள், 3 சமுதாய கூடங்கள், 2 திருமண மண்டபங்கள், 3 இதர கட்டிடங்கள் உள்பட 78 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், மொத்தம் 545 அறைகள் உள்ளன. மேலும், இந்த மையங்களில் 20,719 நபர்களை தங்க வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மழையால் பாதிக்கப்படும் பகுதிகளாக 75 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதையொட்டி, அந்த பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏரி கரைகள் உடைப்பு போன்ற பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்வதற்காக 15,750 மணல் மூட்டைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 40 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திற்கான மொத்த நீர் தேவையில், 40 சதவீதம் தென்மேற்கு பருவமழை காலத்திலும், 60 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்திலும் பூர்த்தியாகும். ஆனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளால், மாவட்டத்தின் தேவைக்கும் அதிகமான மழையும், அதனால் உயிர் மற்றும் பயிர் சேதமும் ஏற்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த மாதம் 1ம் தேதிக்கு பிறகு, கடந்த 40 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 61 கால்நடைகள் பலியாகியிருக்கிறது. 36 வீடுகள் முழுமையாகவும், 344 வீடுகள் பகுதியாகவும் இடிந்து விழுந்து சேதமடைந்திருக்கிறது.  அதோடு, கடந்த மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் பெய்த கனமழையின்போது கீழ்பென்னாத்தூரில் ஒருவரும், போளூரில் ஒருவரும், செய்யாறில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

Related Stories: